GOSPEL OF YOGI RAMSURATKUMAR
GOSPEL OF YOGI RAMSURATKUMAR
GOSPEL OF YOGI RAMSURATKUMAR
ஆசிரியரின் முன்னுரை
S. Parthasarathy, Tiruvannamalai.
சுவாமி யோகி ராம்சுரத்குமாருடன் எனது வாழ்க்கைப் பயணம் இதுநாள்வரை சுமார் 45 ஆண்டுகள் இதமாக, மானுட சுக துக்கங்களுடனும், மானுட வாழ்வு கடந்த ஒருவித அமானுஷ்ய ஆன்ம அனுபூதியுடனும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
சுவாமியோடு கழிந்த 25 ஆண்டுகளில் நான் கண்டு ரசித்து, பிரமித்து, கண்ணீர் மல்கி, உணர்வுகள் பிரவாகமாக வெளிப்பட்ட சில சம்பவங்களை இங்கே கோர்த்துள்ளேன். இவைகள் யாவும் முகநூல் வாயிலாகவும், எனது முந்தைய நூல் "யோகியுடன் கொஞ்ச தூரம்" வாயிலாகவும் ஏற்கனவே வெளிவந்துள்ளது. அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து Gospel of Yogi Ramsuratkumar என்ற பெயரில் வலைதளத்தில் வெளியிட்டுள்ளேன்.
இதே வலைதளத்தில் சுவாமியின் சரிதமான Amarakavyam என்ற சுவாமியின் ஆங்கில வரலாற்று நூலையும் பதிவேற்றியுள்ளேன். மேலும் சுவாமியின் வாழ்க்கைச் சரிதத்தின் சுருக்கத்தையும் தமிழில் கொடுத்துள்ளேன்.
இதுதவிர திரு.ஜக்கி வாசுதேவரின் குழுவினர் சுவாமியின் சரிதத்தைக் காணொளிக் காட்சியாக எடுத்ததையும் வலைதளத்தில் இணைத்துள்ளேன்.
சுவாமி விரும்பி ரசித்த பாடல்களில் சிலவற்றையும் இதே வலைதளத்தில் சேர்த்துள்ளேன். சுவாமியின் புகைப்படத் தொகுப்பையும் இந்த வலைதளத்தில் காணலாம்.
சுவாமியின் உன்னதமான தெய்வீகத்தை அறிந்து, தெளிந்து, அவர்தம் நாமத்தை நெஞ்சிலிருத்தி வாழ்ந்திடவும், அந்தப் பேரண்டப்பெருவெளியில் ஆனந்த நடம் புரியும் நமது சுவாமியின் சொரூபத்தில் அனைவரும் கரைந்து, ஒன்றிடவும் சுவாமியின் அருள் வேண்டி கைகூப்பித் தொழுகின்றேன்.
இந்த வலைதளத்திற்காகத் தங்களது பக்திபூர்வமான சேவைகளைச் செய்த திருமதி. ராம.வெண்ணிலா, குமாரி ராம சுகீர்த்தி, திரு.ராமலிங்கம் இவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய திரு.அகநாழிகை வாசுதேவன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூலை அற்புதமாக வடிவமைத்து அச்சிட்டுத்தந்த திரு.சொ. ராஜேஸ், ஸ்ரீநிவாஸ் பைன் ஆர்ட்ஸ் (பி) லிமிட், கீழத்திருத்தங்கல், சிவகாசி அவர்களுக்கும், அவர்களின் தொழில்நுட்பக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நூலை எனது குரு யோகி ராம்சுரத்குமாரின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து, வணங்குகிறேன்.
யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.
இவண், பார்த்தசாரதி,
"யோகிஸ்தலம்",
திருவண்ணாமலை-606 603.
1/12/2020