top of page

பரிபூர்ணத் தெய்வீகம்

1955 லிருந்து 1959 வரை அவர் இந்தியாவெங்கும் சுற்றித் திரிந்தார். முடிவில், திருவண்ணாமலை வந்தடைந்தார். அருணாச்சல மலை அவருக்கு அடைக்கலம் அளித்தது. அங்குள்ள குகைகளில், முக்கியமாக குகை நமச்சிவாயர் குகையில் அவர் தன்னுடைய சாதனைகளைத் தொடர்ந்தார். ஜே.கிருஷ்ணமூர்த்தி எனும் தத்துவ ஞானியின் அருளால், பப்பா ராமதாசரோடு ராம்சுரத் குன்வர் முற்றிலுமாக ஒன்றினார். அவர் தேகம் தெய்வீகமானது அங்கே நீராடல் நின்றுபோனது. திருமேனியே கங்கையானது. அவரிடம் குடிகொண்ட பரமாத்ம பேரொளியால் அவரது கருநிற தேகம் பொன்னிறமாக மாறியது. அவரது தெய்வீகத் தன்மையை அறிந்த ரமண மஹரிஷியின் உன்னத சீடர் பண்டிட் டி.கே.சுந்தரேச ஐயர் அவரை ‘யோகி’ என அழைக்கலானார்.

1965ம் ஆண்டிலிருந்து ராம்சுரத் குன்வர் என்ற பெயர் ‘யோகி ராம்சுரத்குமார்‘ எனும் நாமமாக மாறியது. ஆண்டவனின் எத்தனையோ நாமங்களில் ‘யோகி ராம்சுரத்குமார்‘ எனும் இந்த நாமம் ஆத்ம சாதனை புரிபவர்களுக்கும், பிறவிப் பிணியிலிருந்து மீள நினைப்பவர்களுக்கும் உகந்த நாமமாக மாறியது. ‘யோகி‘ என்று பண்டிட் டி.கே.சுந்தரேச ஐயர் முதலில் அழைத்தாலும், ராம்சுரத் குன்வர் என்ற பெயர் எப்படி ‘ராம்சுரத்குமாராக’ மாறியது என்று இதுவரை யாரும் அறியமுடியாத ரகசியமாக உள்ளது. 1965ம் ஆண்டிலிருந்து ‘யோகி ராம்சுரத்குமார்’ திருவண்ணாமலையில் தன் அருளாட்சியைச் செய்ய ஆரம்பித்தார்.

1947ல் குருவைத் தேடிப் புறப்பட்ட ராம்சுரத் குன்வர் 1965ல் குருவருளால் பரிபூரணராகி, உலகை ரட்சிக்கப் புறப்பட்டார். அவரின் 18 ஆண்டுகால தீவிரமான தவ வாழ்க்கை, தியாகம், குருபக்தி, துறவறம், தியானம், அவரைப் பரிபூரண பரப்பிரம்மத்தில் ஒருங்கிணைய வைத்தது. அங்கே ராம்சுரத் குன்வர் இல்லை. யோகி ராம்சுரத்குமார் எனும் பரப்பிரம்ம சொரூபமே இருந்தது.

1965லிருந்து யோகி ராம்சுரத்குமார் தன்னுடைய பிரியமான பக்தர்களுக்காகத் திருவண்ணாமலையில் காத்திருந்தார். அவரது ஆத்மார்த்த பக்தர்களின் வாழ்வில் பற்பல சூழ்நிலைகளை உருவாக்கி, தங்களின் குருவைத் தேட வைத்தார். ஆன்மிகப்பெருவனத்தில் சிங்கமென உலவிவந்த யோகி ராம்சுரத்குமாரை அவருடைய அணுக்கத் தொண்டர்களும், பக்தர்களும் ஒருவர் பின் ஒருவராகத் தேடி வந்தனர். சிலரை யோகியே தேடிச்சென்று ஆட்கொண்டார்.

யோகி ராம்சுரத்குமார் ஆட்கொண்ட பக்தர்களில் அரசன் முதல் ஆண்டிவரை ஆயிரமாயிரம் பேர் இருந்தனர். அவரிடம் சிறந்த கல்வியாளர்கள் வந்தனர். மேதைகள் வந்து பணிந்தனர். இசைக் கலைஞர்களும், எழுத்தாளர்களும், அரசியல்வாதிகளும், மந்திரிகளும், விவசாயிகளும்,வெளிநாட்டினரும் இறைவனைத் தேடி அலையும் சாதுக்களும், சன்னியாசிகளும், சாதாரண மக்களும் அவர்தாள் பணிந்து ஆன்மிகப் பாதையில் முன்னேறிச் சென்றனர். அங்கே ஆண்களும், பெண்களும் அனைத்துவகைப் பிராணிகளும் தங்களது சுதர்மப்படி தெய்வீகத்தை நோக்கி அவரால் உந்தித் தள்ளப்பட்டனர்.

அந்த அற்புத, ஆன்மிக ரத்தினம் புழுதியில் சில ஆண்டுகள் கிடந்தது. பின்பு சன்னிதி தெரு வீட்டில் சுடர்விட்டுப் பிரகாசித்தது. அதன் பின்னர், சில காலம் ரமண நகர் ‘சுதாமா‘ வில் அருள்பாலித்தது. முடிவில், யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் 2001 பிப்ரவரி 20ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தன் சொரூபத்தை விடுத்தது. அதன்பின், ஆத்மச் சுடரொளியாய் இப்பிரபஞ்சத்தைப் பரிபாலனம் செய்து வருகிறது.

1976லிருந்து 2001 வரை ‘யோகியோடு கொஞ்ச தூரம்’ நடந்த போது நான் கண்ட சில காட்சிகளையும், சம்பவங்களையும் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களையும் உங்களுடன் இங்கே பகிர்ந்து கொண்டேன். இதற்கும் வழிகாட்டியது அந்தக் குருவருளே.

யோகி ராம்சுரத்குமார
ஜெய குரு
ஜெய குரு
ஜெய குரு ராயா!

bottom of page