GOSPEL OF YOGI RAMSURATKUMAR
GOSPEL OF YOGI RAMSURATKUMAR
GOSPEL OF YOGI RAMSURATKUMAR
பால பருவம்
நர்தரா: உத்திரப்பிரதேச மாநிலத்தின் கீழ்க்கோடியில் கங்கைக் கரையில் அமைந்த ஒரு குக்கிராமம். கங்கையின் புனிதமும், இரு கரையிலும் மண்டியிருந்த அடர்ந்த வனத்தின் பேரமைதியும், அங்கு வாழ்ந்த வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் சுந்தர வனப்பும், கங்கையின் கரையோரத்தில் ஆண்டவனுக்குத் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட சாதுக்களின் சஞ்சாரமும் சேர்ந்து நர்தராவை யாருமே அறியமுடியாத ஒரு மர்மமான ஆன்மிக ஸ்தலமாக மாற்றியிருந்தது. தன்னை வென்ற ஞானிகள் பலர் அங்கே மௌனமாக சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார்கள்.
அங்கு பூமிகார் பிராமணர்கள் எனும் செல்வாக்கான சமுதாயம் வாழ்ந்து கொண்டிருந்தது. கால்நடைகளைப் பராமரித்தல், விவசாயம் இவைதான் அவர்களின் பிரதானத் தொழில்கள். பிராமணர்கள் எனப் பெயர் பெற்றிருந்தாலும், அங்குள்ள பெரும்பான்மையான மக்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களே. தங்களுடைய பரம்பரைத் தொழிலான விவசாயத்தையும், கால்நடைகளைப் பராமரித்தலையும் தவிர்த்து வேறு எதிலும் அவர்கள் நாட்டம் கொள்ளாதிருந்தார்கள்.
1900களின் ஆரம்பத்தில் நர்தராவில் வாழ்ந்த பூமிகார் சமுதாயத்தின் தலைவராக ராம்தத் குன்வர் இருந்தார். கட்டுமஸ்தான சரீரமும், வீரமும் நிறைந்த அவர் சிறந்த மல்யுத்த வீரராகவும் இருந்தார். அவரது துணைவியார் குஸும்தேவி. ராம்தத் குன்வரின் பெற்றோர்கள் சிவதயாள் குன்வர், ராதிகா தேவி. இவர்களின் கடும் உழைப்பில் கங்கைக் கரையில் சுமார் 30 ஏக்கர் நிலத்தில் இவர்கள் விவசாயம் செய்து வந்தார்கள். கங்கை அன்னை இவர்களின் நிலங்களுக்குத் தேவையான போஷாக்கு அளித்து, அக்குடும்பத்தை மகிழ்ச்சியோடு வாழவைத்துக் கொண்டிருந்தாள்.
சிவதயாள் குன்வரும், அவரது மனைவி ராதிகாதேவியும் மறைந்த பின்னர் அவர்களது ஒரே புதல்வரான ராம்தத் குன்வர் விவசாயத்தையும், கால் நடைகளையும் பேணிப் பாதுகாத்து வந்தார். அவருக்கு மூன்று புதல்வர்கள். மூத்தவர் மனரக்கன் குன்வர், அடுத்தவர் ராம்சுரத் குன்வர் மூன்றாமவர் ராம்தஹின் குன்வர்.
இந்தஅருமையான குடும்பம் பெருமையாக நர்தராவில் வாழ்ந்து வந்தது. ராம்தத் குன்வரின் மூத்த புதல்வர் இளம்பிராயம் அடைந்து, தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலும், கால்நடைகளைப் பராமரிப்பதிலும் பெரும்பங்காற்றினார். அடுத்தவர் ராம்சுரத் குன்வர் குடும்பத்துக்கும், ஊருக்கும் செல்லப்பிள்ளை. ராம்சுரத் குன்வர் 1918ல், டிசம்பர் மாதம் 1ந் தேதி அவதரித்தார். மதிநுட்பம் மிகுந்தவர். இதயத்தில் ஈரம் மிகுந்தவர். எவர் கஷ்டப்பட்டாலும் முன்நின்று உதவி புரிபவர். ஏழைகளின் பசியையும், சாதுக்களின் பசியையும் ஆற்றியவர். படிப்பில் மிகுந்த ஆர்வமும் கொண்டிருந்தார்.
அக்காலத்தில் சாதுக்களும், தபஸ்விகளும், யோகிகளும் கங்கையைப் பிரதட்சிணம் செய்வார்கள். கங்கையின் பிறப்பிடமான கங்கோத்திரியில் இருந்து கங்கையின் வடப்புறக்கரை வழியாகப் புறப்பட்டு, கங்காசாகர் வரை நடைப்பயணம் மேற்கொள்வார்கள். பின் கங்காசாகரில் கங்கையைப் படகில் கடந்து தென் கரை அடைந்து மீண்டும் கங்கோத்திரி வரை நடந்து செல்வார்கள். இதன் மொத்த தூரம் சுமார் 5000 மைல்கள் அதாவது 8000 கி.மீ., இந்த தூரத்தைக் கடக்க சுமார் 6 ஆண்டுகள் ஆகும். மழைக் காலத்தில் வழியில் உள்ள ஏதாவது கிராமத்தில் உள்ள கோவில்களில் அவர்கள் தங்கிவிடுவார்கள். மழைக்காலம் முடிந்ததும் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள்.
இத்தகைய மஹாவீரர்கள் நடந்து செல்லும் பாதையில்தான் நர்தரா அமைந்திருக்கிறது. சில நேரங்களில் இரவில் சில சாதுக்கள் நர்தராவில் கங்கைக் கரையில் தங்குவதுண்டு. அவர்களுக்கு ராம்சுரத் குன்வர்தான் முதலில் ஆகாரம் அளிப்பவராக இருப்பார். சில சமயங்களில் இரவில் நேரம் கடந்து வரும் சாதுக்களுக்கு ஆகாரம் படைப்பதற்காக, எவருக்கும் தெரியாமல் தன் வீட்டிலும், ஏன் சில சமயங்களில் அடுத்தவர் வீட்டிலும் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றுவிடுவார். அப்படியே எவருக்கேனும் தெரிந்தாலும், அவர்களும் ராம்சுரத் குன்வரை எதுவும் சொல்வதில்லை.
ராம்சுரத் குன்வர் கங்கை பிரதட்சிணம் செய்யும் சாதுக்களைப் பார்ப்பதிலும், அவர்களைப் போஷிப்பதிலும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். அவர்களின் சுதந்திரம், துறவு, பயண அனுபவம், குழந்தைத்தனம், ஆனந்தம், பகவத் ஞானம், தியானம், வாழ்க்கை முறை ஆகியவை ராம்சுரத் குன்வரை மிகவும் கவர்ந்தன. எத்தகைய இன்பமான வாழ்க்கை! அந்தச் சாதுக்களையே கவனித்த வண்ணம் ராம்சுரத் குன்வர் ஏங்கி நிற்பார்.
ராம்சுரத் குன்வருக்கு 13 வயதானது. ஒருநாள் நர்தராவில் உள்ள கிணற்றில் தண்ணீர் இரைத்துக் கொண்டிருந்தார். நீண்ட கயிற்றில் ஒரு வாளியைப் பிணைத்து அதன் மூலம் தண்ணீர் சேந்திக் கொண்டிருந்தார். அவர் தண்ணீர் சேந்திக் கொண்டிருந்த இடத்துக்கு நேரெதிரில் கிணற்றின் மறுபக்கம் ஒரு சிறு பறவை அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தது. அச்சிறு பறவையின் அழகால் கவரப்பட்ட ராம்சுரத் குன்வர் கையில் பிடித்திருந்த கயிற்றுடனேயே அப்பறவையை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார். அனிச்சையாக ஏதோ ஒன்று உந்தித்தள்ள அவர் தன் கையிலிருந்த கயிற்றை அப்பறவையின் மீது வீசினார். சற்றும் எதிர்பாராதவிதமாக அந்தப் பறவை அக்கயிற்றில் அடிபட்டு விழுந்துவிட்டது.
பறவைக்கு அடிபட்டுவிட்டதைக் கண்ட ராம்சுரத் குன்வர் பதறிப்போய் பறவை இருந்த இடத்துக்குச் சென்று பார்த்தார். பறவை அசைவற்றுத் தரையில் விழுந்து கிடந்தது. அவர் கலங்கிப்போனார். பறவையைக் கையில் எடுத்தார். வாயினால் அதன் அலகில் மெதுவாக ஊதினார். பறவை அசையவில்லை. அதை எடுத்துக்கொண்டு கங்கையை நோக்கி ஓடினார். கங்கையில் சில துளி நீரை எடுத்து பறவையின் அலகில் செலுத்திப் பார்த்தார். பறவையிடம் எந்தவித உயிரோட்டமும் தெரியவில்லை. ஆம், அப்பறவை இறந்து போய்விட்டது.
ராம்சுரத் குன்வர் கையில் பறவையைப் பிடித்தபடி விக்கித்து நடுநடுங்கிப் போய்விட்டார். அவர் இதுவரை எந்தப் பிராணிக்கும் ஊறு விளைவித்ததில்லை. இன்று இது எப்படி நடந்தது? அவருக்குப் புரியவில்லை. சற்றுநேரம் முன்பு வரை தன்னை அழகாகப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பறவையின் கண்கள் மூடியிருந்தன. தன்னை முழுவதும் நம்பி தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பறவையைக் கொன்றுவிட்டோமே என்று அவர் கலங்கிப் போனார். கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர். என்னால் எப்படி அதைக் கொல்ல முடிந்தது? நான் அதைக் கொல்ல நினைக்கவேயில்லையே, இது என்ன விபரீதம்?
சற்றுமுன் வரை பறந்து திரிந்த அந்தப் பறவையின் இறக்கையில், பறக்கும் சக்தி போய்விட்டதே. அந்தப் பறவையின் உடலில் இருந்த உயிர் எங்கே போய்விட்டது? அதைத் திருப்பி கொண்டு வர முடியாதா? உயிரைப் போக்கிய எனக்கு உயிரைத் திருப்பிக் கொண்டு வர ஏன் முடியவில்லை? ராம்சுரத் குன்வரின் உடல் நடுநடுங்கியது. பறவையை மீண்டும் உற்றுப் பார்த்தார். அந்தப் பறவையின் அழகு எங்கே போய்விட்டது? அதன் பறக்கும் சக்தி என்னாயிற்று? அதன் இறக்கை இன்னும் இருக்கிறது. ஆனால், அது பறக்கவில்லையே? இதுவரை எது அதைப் பறக்க வைத்தது? அது ஏன் பறவையிடமிருந்து சென்றுவிட்டது? அந்தக் கயிறுதான் காரணமா? சென்றுவிட்ட அந்தச் சக்தியைத் திருப்பிக் கொண்டுவர சாத்தியமே இல்லையா?
கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. துக்கம் இதயத்தைப் பிசைந்தது. கங்கையின் நீரோட்டம் போன்றே ராம்சுரத் குன்வரின் கண்களில் நீரோட்டம் நிற்கவே இல்லை. பறவையைக் கங்கை நீரில் விட்டார். நீரில் பறவை மிதந்தபடி சென்றது. சற்றுநேரத்தில் கண்களுக்குத் தெரியாமல் மறைந்துவிட்டது. தடுமாறி நடந்து கங்கை கரையில் அமர்ந்தார். விம்மி விம்மி வெகுநேரம் அழுதார். வாழ்வில் ராம்சுரத் குன்வர் சந்தித்த முதல் அதிர்ச்சி அது. இறப்பின் அதிர்ச்சி அவரது புலன்களைக் கூர்மையடையச் செய்தன. பிறப்பைப் பற்றியும், இறப்பைப் பற்றியும் அவரது புத்தி தீவிரமாக ஆராய்ந்தது.
அந்த நாளிலிருந்து அந்தச் சிறு பாலகனின் மனம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தது. அவரது அனைத்துக் கேள்விகளும் பதிலளிக்க முடியாத, சாத்தியமில்லாத கேள்விகளாகவே இருந்தன. ராம்சுரத் குன்வரின் உணர்வுகளும், எண்ணங்களும் உள்முகமாக செல்ல ஆரம்பித்தன. அங்கே பெறும் மாறுதல் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. நண்பர்களோடு சதா சர்வகாலம் விளையாடிக் கொண்டிருந்த ராம்சுரத் குன்வர் தனிமையில் அமர்ந்து, உலக உணர்வற்றவராக பிறப்பு, இறப்பு பற்றியும், இரண்டின் நடுவே காட்சி தரும் வாழ்வைப் பற்றியும் தியானிக்க ஆரம்பித்தார். அவருள்ளே ஏதோ விழித்துக்கொண்டது. எதையோ தேட ஆரம்பித்தார். தொலைத்துவிட முடியாத பொருளை அவர் தேடினார். அவர் அந்த பொருளைக் காண விழைந்தார். எல்லாவற்றையும் அவர் கண்டார். ஆனாலும், அவர் தேடிய பொருளைக் காணமுடியவில்லை, தேடுதலும் நிற்கவில்லை. இந்தத் தேடுதலினால் அவர் தனிமையை விரும்பினார். மௌனமாக, தனியாக கங்கைக்கரையில் அமர்ந்தபடியே ராம்சுரத் குன்வர் அதைத் தேடினார்.
ராம்சுரத் குன்வரின் கிராமத்தின் அருகே கங்கைக் கரையினிலே ஒரு சிறு குடிலில் கபாடியா பாபா எனும் ஒரு ஞானி வாழ்ந்து வந்தார். அவரைப் பற்றி அங்குள்ள கிராமங்களில் பல கதைகள் சொல்லப்பட்டன. அவர் சிறிது தூரத்தில் உள்ள ஒரு நகரில் நீதிபதியாக பதவி வகித்தவர் என்றும், தன் ஒரே மகளது கணவனுக்கு ஒரு கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கினார் என்றும், மருமகனைத் தூக்கிலிட்ட பின்பு அவர் சம்சார வாழ்வைத் துறந்து சன்னியாசியாக கங்கையை பிரதட்சிணம் செய்து, முடிவில் நர்தரா கிராமம் அருகில் கங்கைக் கரையில் ஒரு குடிலை அமைத்து தங்கிவிட்டார் எனவும் செவிவழிச் செய்திகள் அங்குள்ள கிராமங்களில் பரவியிருந்தது.
அவர் பிட்சைக்காகத் தன் கரங்களில் பெரிய மண்பானை சுமந்து செல்வார். மண்பானையை ‘கபாடியா‘ என அங்கு சொல்வார்கள். கபாடியா வைத்திருப்பதால் அவர் கபாடியா பாபா ஆகிவிட்டார். கபாடியாவை எடுத்துகொண்டு ஒவ்வொரு ஊராக பிச்சைக்குச் செல்வது அவர் வழக்கம். “ரோட்டி தே, ரோட்டி தே” (ரொட்டிகொடு ரொட்டிகொடு) என்று உரக்கக் கூவிக் கொண்டு, கௌபீனம் மட்டும் அணிந்த அந்த மஹான் ஊர்வலம் வருவதைப் பார்த்தால் சிறுவர்கள் நடுநடுங்கிப் போவார்கள்.
ஆயினும், நமது ராம்சுரத் குன்வர் மட்டும் விதிவிலக்கு. கபாடியா பாபா என்றால் ராம்சுரத் குன்வருக்கு மிகவும் பிரியம். அவரது குடிலில் எப்பொழுதும் அணையாத ஒரு அக்னி குண்டம் இருக்கும். அதனருகில் கபாடியா பாபா அமர்ந்துகொண்டு எங்கோ பார்த்துகொண்டிருப்பார். ராம்சுரத் குன்வர் அவரையே பார்த்தவண்ணம் வெகுநேரம் பொழுதைக் கழிப்பார். வீட்டில் ராம்சுரத் குன்வர் இல்லை என்றால் ஒன்று கங்கைக் கரையில் தனியாக அமர்ந்திருப்பார் அல்லது கபாடியா பாபாவின் குடிலில் அவரையே நோக்கியபடி அமர்ந்திருப்பார்.
கபாடியா பாபா, நர்தரா வரும் சமயமெல்லாம் ராம்சுரத் குன்வர் அவருக்கு அன்போடு உணவளிப்பார். தனிமையையே விரும்பும் கபாடியா பாபா எவர் வந்தாலும் உரத்த ஸ்தாயியில் ‘ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே‘ என்ற மந்திரத்தைப் பாடுவார். அவர் உரக்கப் பாடுவதைக் கேட்கும் சிறுவர்கள் பயந்தோடி விடுவார்கள். ஆனால் நமது பாலகன் ராம்சுரத் குன்வர் மட்டும் அந்த மகாமந்திர சக்தியில் மயங்கி அவரையே சுற்றிச் சுற்றி வந்தார்.
பறவையின் மரணம் ஏற்படுத்திய பாதிப்பு வெளியில் தெரியாதபடி ராம்சுரத் குன்வர் தன்னுடைய அன்றாட வாழ்வைக் கழித்துக் கொண்டிருந்தார். அவர் பள்ளிக்குச் சென்றார். நன்றாகப் படித்தும், கனிவோடும், ஒழுக்கத்தோடும் நடந்துகொண்டு ஆசிரியர்களிடம் நற்பெயர் வாங்கினார். பெரியோர்களிடம் மரியாதை செலுத்தினார். சாதுக்களையும், துறவிகளையும் பணிந்து வணங்கினார். கங்கை மாதாவை தன் தாயாகவே பாவித்தார். கங்கையை பூஜித்தார். தன் தாயார் குஸும்தேவியிடம் ராம கதையையும், ஹனுமன் கதையையும், கிருஷ்ணன் கதையையும் மீண்டும் மீண்டும் கேட்டார். எத்தனை முறை கேட்டாலும் ராம, கிருஷ்ண, ஹனுமன் கதைகள் அவருக்குத் திகட்டவே இல்லை. இரவில் தாயாரிடம் கதை கேளாமல் அவர் தூங்கியது இல்லை.
ஆரம்பக் கல்வியை ராம்சுரத் குன்வர் பக்கத்து ஊரான புசோலா எனும் கிராமத்துப் பள்ளியில் படித்தார். விவசாயத்திலும், கால்நடைகளைப் பராமரிப்பதிலும் அவருக்கு ஈடுபாடு ஏற்படவில்லை. மேற்கல்வி கற்க விருப்பப்பட்டார். தன் தமையன் மனரக்கன் குன்வரின் ஊக்குவிப்பாலும், பரிந்துரையாலும் ராம்சுரத் குன்வரின் தந்தை நர்தராவிலிருந்து சிறிதுதூரத்தில் உள்ள பாரியா என்னும் சிறு ஊரில் நடுநிலைப் பள்ளியில் அவரைப் படிக்க வைத்தார். ராம்சுரத் குன்வர் வெகுச் சிறப்பாகப் படித்தார். பின்னர், பலியா எனும் நகரத்தில், பலியா உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். 1937ம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றிகரமாக முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார்.
இதனிடையே, ராம்சுரத் குன்வரின் 16ம் வயதில், ஒருநாள் கபாடியா பாபாவின் குடிலில் பாபாவின் முன்னே அவர் அமர்ந்திருந்த பொழுது, கபாடியா பாபா அவருள்ளே நீறு பூத்த நெருப்பாக எரிந்து கொண்டிருந்த ஆன்மத் தேடுதல் வேட்கையை ஊக்குவிக்கும் பொருட்டு, அவரைக் காசிக்குச் சென்றுவர ஆக்ஞையிட்டார். காசியில் மூன்று நாட்கள் தங்கியிருக்கவும், தன் வாழ்வின் நோக்கத்தைக் காசி விஸ்வநாதரிடம் கேட்டு அறிந்து கொள்ளவும் பணித்தார்.
ராம்சுரத் குன்வர் காசி சென்றடைந்தார். காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தார். விஸ்வநாதர் முன்னால் நெடுநேரம் கண்மூடி, கைகூப்பித் தொழுதவண்ணம் இருந்தார். அவர் பார்வையிலிருந்து அவர் மறைந்தார். அவரின் தேகம், மனம், புத்தி, உணர்வுகள் அவரைவிட்டு விலகிச் சென்றன. அங்கே ஒரு சிறு ஜோதி தெரிந்தது. அந்த ஜோதி சிறிது சிறிதாகப் பெரிதாகி, பிரகாசமடைந்து அவரைத் தனதாக்கிக் கொண்டது. அவருள்ளே தெய்வீகப் பரவசம் பற்றிக் கொண்டது. அங்கே இடம், காலம், அனைத்தும் மறைந்து போயின. அந்த ஜோதியில் ராம்சுரத் குன்வர் முற்றிலும் ஐக்கியமானார். அவருக்குள் ஏதோ மாற்றம் ஏற்பட்டது. அது எந்தவிதமான மாற்றம் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பார்ப்பதெல்லாம் பிம்பங்களாகத் தெரிந்தன. அதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன. நிரந்தர நிலைப்பாடு எந்தக் காட்சியிலும் தென்படவில்லை. ராம்சுரத் குன்வர், தான் யார், எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்றே அறியாதவரானார். அண்ட வெளியில் தனியாக இருப்பதுபோல் உணர்ந்தார். திடீரென அவர் உடலும், உள்ளமும் சிலிர்த்தன, காசி விஸ்வநாதர் முன்னிலையில் அவர் நின்றுகொண்டிருப்பதை அறிந்தார். அவர் விழித்துக்கொண்டாரா அல்லது உலக மாயையில் மீண்டும் தள்ளப்பட்டாரா? அந்த ஜோதி அவரை நோக்கி சிரித்தபடி இருந்தது. தன் வாழ்வின் நோக்கம் என்ன? அவர் மனம் கேட்டது. அந்த தெய்வீகச் சுடர் ஏதோ சொல்வது போன்றிருந்தது. அவரால் புரிந்து கொள்ளமுடியவில்லை. மெதுவாகக் கோவிலிருந்து வெளியே வந்தார்.
கங்கையை நோக்கி அவர் கால்கள் அவரைத் தாங்கிச் சென்றன. அங்கே ஒரே புகைமூட்டம். இறந்த மனித உடல்கள் தகனம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. எரியாத மீதமும் சாம்பலும் கங்கையில் கரைக்கப்பட்டன. எரிமேடையிலிருந்து சிறிது தள்ளி, ஏகாந்தமாக அமர்ந்தவாறு மனித உடல்கள் எரிக்கப்படுவதை ராம்சுரத் குன்வர் எவ்வித உணர்ச்சியுமின்றி வெறித்துப் பார்த்தார். மனித சரீரத்தின் மாயை புரிந்தது போல் இருந்தது. அவர் தன் சரீர உணர்வை இழக்க ஆரம்பித்தார். அவரது சரீரம் மாண்டு போனது போல் உணர்ந்தார். சரீரத்தை எரிமேடையில் கிடத்தினர். சரீரம் எரியூட்டப்பட்டது. சரீரம் வெந்து சாம்பலானது. சாம்பல் கங்கையில் கரைக்கப்பட்டது. பின் அங்கே எதுவுமேயில்லை. எதுவும் மீதமில்லை.
அவர் உதடுகள் அவரறியாமலே விரிந்து சிரித்தன. காணும் காட்சியில் ஒன்றிவிட அந்த இளம் வயதிலேயே அவரால் முடிந்தது. சட்டென்று அவர் விழித்துக் கொண்டார். ஏனோ அவருக்கு ஆனந்தமாக இருந்தது. வாய்விட்டுச் சிரித்தார், பின் எழுந்தார் நடந்தார். கங்கைக் கரையில் பல படித்துரைகளைக் கடந்து நடந்து சென்றார். இரவு வந்தது. அங்குள்ள படித்துறையில் படுத்துக் கொண்டார். கங்கை அருகே அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. விண்மீன்களின் ஒளியும், நிலவின் ஒளியும், கங்கையின் நளின ஓட்டமும் அங்குள்ள அனைத்து வஸ்துக்களும் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதை ராம்சுரத் குன்வர் கண்டார், ஆனந்தித்தார். அந்தத் தியானத்தில் அவரும் ஒன்றினார்.
மறுநாள் காசியின் அருகில் உள்ள சாரநாத் சென்றார். புத்த பெருமான் முதலில் உபதேசம் செய்த இடத்தை அடைந்தார். அவரிடம் மீண்டும் பரவசநிலை தொற்றிக் கொண்டது. அங்கேயே சுற்றிச் சுற்றி நடந்தார். புத்தர் காலடிகள் பட்ட இடத்தில் தான் இருப்பதில் பெரும் ஆனந்தம் கொண்டார். புத்தர் வாசம் செய்த இடத்தில் அன்றைய பொழுதை ராம்சுரத் குன்வர் கழித்தார்.
காசியிலும், சாரநாத்திலும் ராம்சுரத் குன்வர் பரமானந்தமான தியானத்தில் அமைதியாக மூன்று நாட்களைக் கழித்தார். ஊர் திரும்ப வேண்டியிருந்தது. கனத்த இதயத்துடன் நர்தரா திரும்பினார். கபாடியா பாபா அவரது வருகைக்காக காத்திருந்தார். ராம்சுரத் குன்வரின் சரீரத்தில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தை அவரால் தெளிவாகக் காணமுடிந்தது. தெய்வீக அருள் ராம்சுரத் குன்வருக்கும் சித்தித்துவிட்டது என்பதை அறிந்து ஆனந்தமாகச் சிரித்தார். ராம்சுரத் குன்வர் காசியிலும், சாரநாத்திலும் அடைந்த அனுபவங்களை கபாடியா பாபாவிடம் விவரித்தார். கவனமாகக் கேட்ட கபாடியா பாபா, அவரை, பல ஞானியரின் வாழ்க்கைச் சரிதங்களைப் படிக்கச் சொன்னார். புத்தர், சுவாமி ராமதீர்த்தர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரது சரிதங்களையும், உபதேசங்களையும் படித்தறியச் சொன்னார். இதுதவிர, துளசி ராமாயணத்தையும், பகவத் கீதையையும் தினமும் படிக்கச் சொன்னார். இவற்றையெல்லாம் ராம்சுரத் குன்வர் தன் குருவின் திருவடியை அடையும்வரை தொடர்ந்து படித்துவரவேண்டுமெனச் சொல்லி அருளினார். அதுவரை கபாடியா பாபாவை தன் குரு என நினைத்திருந்த ராம்சுரத் குன்வருக்கு அது அதிர்ச்சியாகிவிட்டது. “அப்படி என்றால் நீங்கள் என் குரு இல்லையா?” கபாடியா பாபாவிடம் ராம்சுரத் குன்வர் கேட்டார்.
“உன் குரு தெற்கே இருக்கிறார்” சிரித்தபடி கபாடியா பாபா கூறினார். யார் அவர் என்ற ராம்சுரத் குன்வரின் கேள்விக்கு, சிரிப்புதான் பதிலாகக் கிடைத்தது.
ராம்சுரத் குன்வர் பகவத்கீதையையும், துளசி ராமாயணத்தையும் படிக்க ஆரம்பித்தார். மீராபாயின் பாடல்களும், கபீரின் பாடல்களும் அவரை உருக்கின. துளசி ராமாயணம் அவரைப் பக்தி மார்க்கத்தில் காலூன்ற வைத்தது. பகவத் கீதை அவரை கர்ம யோகத்திலும், பக்தி யோகத்திலும், ஞான யோகத்திலும் திளைக்க வைத்தது. மீராவின் பாடல்களும், கபீரின் பாடல்களும், பகவத்கீதையும், துளசி ராமாயணமும் ராம்சுரத் குன்வரின் வாழ்வில் முற்றிலும் கலந்துவிட்டன. பிற்காலத்தில் அவர் உபநிஷத்துக்களையும் கற்று அறிந்தார். இளம் வயதில் அவர் கற்ற அத்தனை நூல்களும் அவற்றின் சாரத்தோடு அப்படியே அவரின் நினைவில் படிந்திருந்தது.
ராம்சுரத் குன்வர் 1937ம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வில் முதன்மையாகத் தேறினார். கிணற்றடியில் பறவையின் மரணம் நிகழ்ந்த பின்பு, ராம்சுரத் குன்வரின் மனோநிலை மிகவும் மாறியிருந்தது. கலகலப்பாகவும், நண்பர்களுடன் விளையாடியும் மகிழ்ந்திருந்த ராம்சுரத் குன்வர் தனிமையை விரும்பலானார். எப்பொழுதும் கங்கைக் கரையிலோ கபாடியா பாபாவின் குடிலிலோ வெகுநேரம் கழித்தார். சிருஷ்டியையும், ஜீவன்களையும், மரணத்தையும் அவரின் இளம் மனது ஆராய்ந்தது. விடை தெரியாத கேள்விகள் அவர் மனத்தில் மீண்டும் மீண்டும் எழுந்தன. விடை தேட முற்பட்டபோது சோர்வே மிஞ்சியது.